ஆறு தசாப்தங்களுக்கு முன்பு முஹுரத் வர்த்தகத்தின் பாரம்பரியம் பிறந்தது. இது கடந்த 1957-ஆம் ஆண்டு பாம்பே பங்கு சந்தையில் தொடங்கியது. இதனையடுத்து 1992-ஆம் ஆண்டு முன்னேற்றம் அடைந்தது. தேசிய பங்கு சந்தையும் இந்த நல்ல நடைமுறையை ஏற்றுக் கொண்டது. ஒவ்வொரு தீபாவளியும் முஹுரத் வர்த்தக அமர்வால் குறிக்கப்படுகிறது.

வரவிருக்கும் ஆண்டிற்கான செழிப்பு, நல்ல அதிர்ஷ்டத்தை தேடுவதில் நிதி சமூகத்தை ஒன்றிணைக்கும் பாரம்பரியமாக இது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினம் அன்று இந்திய பங்கு சந்தைகள் மாலை ஒரு மணி நேரம் சிறப்பு வர்த்தக அமர்வுக்காக திறக்கப்படுகிறது. செல்வத்தின் தெய்வமான லட்சுமிக்கு வணக்கம் செலுத்தும் விதமாக பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய முறையாக இது கடைபிடிக்கப்படுகிறது.

முஹுரத் என்ற வார்த்தையே மங்களகரமானது என்பதை குறிக்கும். வரலாற்று ரீதியாக முஹுரத் வர்த்தக நாட்களில் சந்தைகள் நேர்மறையாக இருக்கும். அந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் ஆண்டு முழுவதும் வைத்திருக்க விரும்பும் பங்குகளுக்கு ஆர்டர் செய்வார்கள். நாடு முழுவதும் இருக்கும் வணிகர்கள் லட்சுமி பூஜையுடன் அந்த நாளை தொடங்குகின்றனர். மேலும் கணக்கு புத்தகங்களோடு பிரார்த்தனைகள் நடத்தப்படுகிறது.