மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் சீரா பஜார் பகுதியில் 20 வயதான கல்லூரி மாணவி ஒருவர் சக மாணவிகளுடன் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர் சர்ச்கேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி தினமும் மதியம் மற்றும் இரவு உணவை டிபன் சேவை மூலம் பெற்று வருகிறார். தினம் தோறும் மதியம் 12.30 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் டிபன் டெலிவரி செய்யும் நபர் அந்த விடுதியின் வெளியே உணவை வைத்து விட்டு செல்வார்.

சமீபத்தில் தினம்தோறும் டிபனை வைத்து விட்டு செல்லும் நபர் வெளியூருக்கு சென்றதால் புதிய டெலிவரி நபரைத் தொடர்பு கொண்டு தனக்கு உணவு எங்கே வைக்க வேண்டும் என்பதை தொலைபேசியில் மாணவி தெரிவித்துள்ளார். அதன் பின் கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் திடீரென அந்த புதிய டெலிவரி நபரிடம் இருந்து மாணவிக்கு whatsapp மூலம் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்திருந்தது.

இதனைக் கண்ட மாணவி அதிர்ச்சி அடைந்து தன்னுடைய அறையில் உள்ள மற்ற மாணவிகளிடம் காட்டியுள்ளார். அதன் பின் மறுநாள் காலை எல்.டி மார்க் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் கடந்த சனிக்கிழமை உணவு டெலிவரி செய்யும் நபரை கைது செய்தனர். மேலும் அந்த நபரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணையில் அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் திருமணம் ஆனவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.