
உத்திர பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மூன்று ஆறுகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த விழாவில் இந்தியா மட்டுமல்லாது உலகம் அனைத்தில் இருந்தும் பல கோடி பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த நிலையில் சமாஜ்வாடியின் மாநிலங்களவை எம்.பி ஆன ராம்கோபால் யாதவ், கும்பமேளாவின் ஏற்பாடுகள் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, மோசமான ஏற்பாடுகள் உணவு மற்றும் எரிபொருளுக்கு தொடர் தட்டுப்பாடு. கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் இறக்கின்றனர். மேலும் அப்பகுதியில் உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சிலர் இறந்துள்ளனர். உத்திர பிரதேச அரசு அப்பகுதியை வாகனம் இல்லாத பகுதியாக ஆக்கி உள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக எம்.பி ஆன ஹேமமாலினி பதில் அளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, மகா கும்பமேளா ஒரு மாபெரும் வெற்றி. சில இடங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். விபத்து நடந்தது சில உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்காக கும்பமேளா ஏற்பாடுகள் தோல்வி அடைந்தது என அர்த்தம் அல்ல. சிலர் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பாராட்டுகிறார்கள். அனைவரும் நீராட விரும்புவதால் ஏராளமானோர் செல்கின்றனர். அங்கு சென்ற எனக்கு தெரிந்த நபர்கள் மிக நன்றாக நிர்வகிக்கிறார்கள் எனக் கூறியுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.