
தமிழக பாஜக கட்சியில் ஏராளமான திரை பிரபலங்கள் இருக்கிறார்கள். குறிப்பாக நடிகர் சரத்குமார், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகைகள் ராதிகா, குஷ்பூ மற்றும் நமிதா உள்ளிட்ட பல பிரபலங்கள் இருக்கிறார்கள். இதில் நடிகை குஷ்பூ சமீபத்தில் தேசிய மகளிர் அணி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் மாநில அளவில் கட்சி பணி செய்வதற்காக வந்துள்ளார். இந்நிலையில் பாஜக கட்சியில் இருக்கும் பிரபலங்களுக்கு பாஜக எந்த ஒரு பதவியும் வழங்கவில்லை என அதிருப்தியில் இருக்கிறார்களாம். இதன் காரணமாக நடிகர் விஜய் அவர்களை தமிழக வெற்றிக்கழக கட்சிக்கு இழுக்க முயற்சி செய்வதாக புது தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் பேசியபோது இன்னும் சாதகமான பதில்கள் கிடைக்காததால் தொடர்ந்து பேச்சு வார்த்தை என்பது நடந்து வருகிறதாம். குறிப்பாக நடிகை நமிதாவினை கேட்டபோது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பாஜக கட்சியில் இருப்பதாகவும், பிரதமர் மோடி சிறந்த தலைவராக இருக்கும் நிலையில் கட்சி கொடுக்கும் வேலைகளை திருப்திகரமாக செய்து வருவதாகவும் வேறு எந்த கட்சிக்கும் செல்லும் எண்ணம் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் நடிகை குஷ்பு விடம் இது பற்றி கேட்டபோது வேலை வெட்டி இல்லாதவர்கள் கிளப்பிவிடும் வதந்தி. இதற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறினார்.