ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் துல்லிய தாக்குதலில் 9 பயங்கரவாத உட்கட்டு அமைப்புகள் அழிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் எல்லையில் உள்ள பகுதிகளை தாக்கியது. அதில் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நகரங்கள், வழிபாட்டுத் தலங்கள், ராணுவ தளங்களை தாக்க முயற்சி செய்தது. ஆனால் அதனை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் வான்வெளியிலேயே இடைமறித்து அழித்தன.

அதில் பாகிஸ்தானின் ட்ரோன் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டை தாக்கியது. அந்தத் தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் ஜம்மு காஷ்மீரில் உயர் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இரவு நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் வெளிப் பகுதிகளில் ஆங்காங்கே ஏவுகணை மற்றும் ட்ரோன்களின் உலோக பாகங்கள் மற்றும் வெடி மருந்துகள் சிதறிக் கிடந்துள்ளன.

மேலும் குர்தாஸ்பூரில் உள்ள சிச்ரா கிராமப் பகுதியில் உள்ள பகுதிகளில் நேற்று இரவு வெடிக்கும் சத்தம் கேட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் ஒரு பெரிய பள்ளம் திடீரென ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து

அப்பகுதியின் இன்ஸ்பெக்டர் ஜஸ்விந்தே பால் சிங் கூறியதாவது, “இப்பகுதியில் அதிகாலை 4 45 மணிக்கு வெடிச்சத்தம் ஒன்று கேட்டது. ஆனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ராணுவ அதிகாரிகள் உள்பட அனைத்து அதிகாரிகளும் அப்பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர். பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.