கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுகுறித்து கோவை மாநகர சபை போலீசார் கூறியதாவது, தங்களின் நண்பர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை செலவு அவசரமாக பணம் தேவை எனக் கூறி நம்ப வைத்து மோசடியில் ஈடுபடுவது தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கோயம்புத்தூரை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவரின் நண்பர் லண்டனில் இருக்கிறார். அவரது புகைப்படத்தை செல்போனில் முகப்பு படமாக வைத்த எண்ணிலிருந்து முதியவருக்கு இரவு 10 மணிக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் நான் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். உடனடியாக 1 1/2 லட்ச ரூபாய் அனுப்பி வைத்தால் சிகிச்சை முடிந்து பணத்தை தந்து விடுவேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை பார்த்த முதியவர் தனது நண்பரின் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் குறுஞ்செய்தி வந்த செல்போன் வாட்ஸ் அப்பில் தனது நண்பரின் புகைப்படம் இருந்ததால் அந்த எண்ணுக்கு 1 1/2 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பிறகு தான் மறுநாள் நண்பரிடம் பேசியபோது தான் ஏமாற்றப்பட்டது முதியவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து முதியவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். கடந்த 6 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்தது. எனவே அடையாளம் தெரியாத நபர் மற்றும் தெரியாத எண்ணில் இருந்து வரும் தகவல்களை நம்பி ஏமாறக்கூடாது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.