கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் கருணாநிதி நகரில் குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு குமார் சிறுமியின் வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியாக சிறுமியை வெளியே வருமாறு கூறினார். ஆனால் சிறுமி வெளியே வர மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த குமார் நீ வெளியே வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சத்தில் சிறுமி வீட்டின் கதவை திறந்து வெளியே வந்த போது நான் சொல்வதற்கு நீ சம்மதிக்கவில்லை என்றால் உனது பெற்றோரை கொலை செய்து விடுவேன் எனக் கூறி அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் குமாருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.