
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை 2023 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று மூன்றாவது முறையாக உலக கோப்பையை இந்தியா வெல்லுமா ? என இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் போட்டியை ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர். இந்நிலையில் போட்டி குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்-யிடம் கேட்டபோது,
ஒன்றரை லட்சம் இந்திய ரசிகர்கள் இந்தியாவை ஆதரித்து கூச்சலிட்டு ஆர்ப்பரிப்பார்கள். அவர்களுக்கு நடுவில் விளையாடுவது கடினமான ஒன்றுதான். ஆனால் எங்களது திறமையான ஆட்டத்தால், இவ்வளவு பெரிய கூட்டத்தை ஆர்ப்பரிப்பு இல்லாமல், அமைதியாக்குவதை விட சிறந்த சந்தோஷம் எதுவும் இல்லை. அதை நாங்கள் செய்வோம் என கூறியிருந்தார். அதே போல், இந்திய அணியும் அடுத்தடுத்து தனது விக்கெட்டை இழக்க மைதானத்தில் ரசிகர்களின் கூச்சல் சத்தம் குறைந்து கொண்டே சென்றது.
அதிலும், குறிப்பாக பெரும் எதிர்பார்ப்பை கொண்ட விராட் கோலி அவரது விக்கெட்டை இழக்கும் போது மைதானத்தில் நிசப்த அமைதி நிலவியது. கோலி-யின் விக்கெட்டை எடுத்தவரும் பேட் கம்மின்ஸ் தான் என்பதால், அவர் கூறியதைப் போலவே மைதானத்தில் ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் சத்தத்தை அதிரடியாக விராட் கோலி விக்கெட்டை எடுத்து குறைத்துக் காட்டி சொன்னதை செய்துள்ளதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்திய ரசிகர்கள் நம்பிக்கையை விடாமல் வெற்றிக்காக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். எனவே வெற்றி யார் பக்கம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.