நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சியில் இருக்கும் தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து பொதுமக்களை தாக்கி அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் டெலோவுஸ் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சிவனாண்டி(62) என்பவர் பிறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர்.

அப்போது அப்பகுதியில் இருக்கும் 10- ஆம் நம்பர் காப்பி காட்டில் காட்டு யானை தாக்கி சிவனாண்டி இறந்து கிடப்பதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சிவனாண்டியின் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல முயன்றனர். ஆனால் உடலை கொண்டு செல்ல விடாமல் உறவினர்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கூடலூர் உதவி வன பாதுகாவலர் கருப்பையா தலைமையிலான வனக்குழுவினர் யானை ஊருக்குள் நுழைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.