நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1- ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 23 பேரிடம் 4 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியதாவது, வேலை வாங்கி தருவது, கே.ஒய்.சி அப்டேட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி மர்ம நபர்கள்  ஏமாற்றுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் வட மாநிலங்களை சேர்ந்த மோசடி நபர்கள் வறுமையில் இருப்பவர்களின் ஆவணங்களை வாங்கி அவர்களது பெயரில் வங்கி கணக்கு தொடங்குகின்றனர்.

இதனையடுத்து தங்களது மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண்ணை கொடுத்து அந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்கின்றனர். அதன் பிறகு அந்த பணத்தை தங்களது சொந்த கணக்கிற்கு மாற்றுகின்றனர். சில நேரங்களில் போலீசார் வங்கியை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய முயன்றால் அப்பாவிகள் தான் சிக்குகின்றனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.