
டெல்லி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது. பிறகு பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் பாஜக என 3 முக்கிய கட்சிகள் தேர்தலில் களம் இறங்க உள்ளது. இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசும், டெல்லி காவல்துறையும் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் பஞ்சாப் அரசால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அதிஷி மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, மீண்டும் பஞ்சாப் காவல்துறையினர் கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம்.
மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவுப்படி, கெஜ்ரிவால் மீதான தாக்குதல் குறித்து மத்திய அரசு கீழ் வரும் காவல்துறை கண்மூடித்தனமாக இருப்பதாக குற்றம் சாட்டினர். அவரை கொள்ளும் சதியில் பாஜகவும், டெல்லி காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். அவர் மீது ஒன்றன்பின் ஒன்றாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்தியது பாஜக தொண்டர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. எங்களுக்கு டெல்லி போலீசார் மீது நம்பிக்கை இல்லை, அது அமித் ஷாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.