மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி கலவரம் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருதன் கோன் விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இந்திய மாணவர் சங்கர் செயலாளர் மதன்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் இருந்து வெளியேறியனர்.

பின்னர் மாவட்ட துணை செயலாளர் பிரியங்கா தலைமையில் நுழைவு வாயில் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் கோஷம் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தீவிரமடையும் என தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.