கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் காலை மற்றும் மாலை நேர வகுப்புகள் நடைபெறுகிறது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் காலை நேர வகுப்புகள் முடிந்ததும் மாணவ மாணவிகள் மதியம் போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோக்களில் ஏறி பேருந்து நிலையத்திற்கு செல்கின்றனர்.

நேற்று முன்தினம் காலை நேர வகுப்புகள் முடிந்ததும் 2 மாணவர்கள், 6 மாணவிகள் என 8 பேர் ஆட்டோவில் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை லோகநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சில்வர் பீச் ரோட்டில் இருந்து உப்பனாரு பாலத்தை தாண்டி தனியார் ஹோட்டல அருகே சென்ற போது சாலையின் குறுக்கே நாய் சென்றது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக லோகநாதன் ஆட்டோவை திருப்பினார்.

ஆனாலும் நாய் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழ்ச்செல்வன், ரேவதி, கீர்த்திகா உள்பட ஆட்டோவில் இருந்து 9 பெரும் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.