கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் கலபுராகியில் உள்ள ஆண்கள் தங்கும் விடுதியில் உணவு பரிமாறுவது குறித்து மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பீகாரை சேர்ந்த சில மாணவர்கள் இயந்திரங்களால் செய்யப்பட்ட சப்பாத்திகள் கேட்டுள்ளனர். இதற்கு தென்னிந்திய மாணவர்கள் கைகளால் செய்யப்பட்ட சப்பாத்திகளே வேண்டும் என தகராறு செய்தனர்.

இந்த கருத்து வேறுபாடு இரண்டு குழுவினருக்கிடையே மிகப்பெரிய சண்டையாக மாறியது. கல்லூரி அதிகாரிகள் இருதரப்பினரையும் கட்டுப்படுத்த முயற்சித்தனர் இருப்பினும் நிலைமை கைமீறி சென்றதால் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரச்சனையை தூண்ட முயன்றவர்கள் மீது தடியடி நடத்தினர். அதன் பின் மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் ஒரு மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன் விடுதியில் நடைபெற்ற தகராறில் ஏழு மாணவர்கள் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் இருதரப்பு மாணவர்களையும் எச்சரித்துள்ளனர். இதுபோன்று அடுத்த முறை நடைபெற்றால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கல்லூரியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.