டேரில் மிட்செல் 14 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார்..

2024 ஐபிஎல் மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி மதியம் 1:00 மணிக்கு இந்த ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவல் 7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விற்கப்பட்டார். ஒரு கோடி ரூபாய் அடிப்படை விலையான பவலை ரூ.7.40 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. இதையடுத்து இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை 4 கோடிக்கு வாங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6.80 கோடிக்கு வாங்கியது. அதேபோல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை ரூ 1.5 கோடிக்கு வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இதையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதேபோல ஷர்துல் தாக்கூரை சென்னை அணி 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அஸ்மத்துல்லா உமர்சாய் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 50 லட்சத்துக்கு விற்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ஐபிஎல்லில் வரலாற்றில் 20.50 கோடிக்கு ஏலம் போன முதல் வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றார். தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸியை ரூ 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி..  இந்திய வீரர் ஹர்ஷல் படேலை ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செலை ரூ 14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர் என 4 நியூசிலாந்து வீரர்கள் சென்னை அணியில் இடம்பிடித்துள்ளனர்..