சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பில்
இருந்து வந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணாக பேசினார். உடனே அதிகாரிகள் அந்த பெண்ணை சோதனை செய்து பார்த்ததில், அவரது உள்ளாடையின் உள்ளே தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. பின் அவரிடம் இருந்து ரூ.28 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் சுங்க  இலாகா அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணித்த பெண்ணிடம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.40 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 815 கிராம் தங்கம் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டறியபட்டது. பின், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய 2 பெண்களிடம் இருந்து ரூ.69 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 387 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த 2 பெண்களையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.