சென்னை போலீசில் காவல்கரங்கள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் சென்னை நகரில் உள்ள சாலைகளில் அனாதைகளாக சுற்றித்திரியும் மனநோயாளிகள் உள்ளிட்டோரை மீட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து, பின் அவர்களின்  உறவினர்களுடன் ஒப்படைத்து வருகிறது. இந்த அமைப்பை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி வைத்தார். பிறகு தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மேரிராஜூ தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட கடந்த 2 ஆண்டுகளில் 4,113 பேர்களை மீட்டு, 506 பேர்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் 379 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3,137 பேர்கள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் 8 பெண்கள் உள்ளிட்ட 12 பேர்கள் மீட்கப்பட்டதில், 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சாவித்திரி (55) என்ற பெண் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதால், அவரது உறவினர்கள் இறந்து போனதாக கருதப்பட்டு, அவர் காணாமல் போன நாளில் அவருக்கு ஆண்டுதோறும் திதி கொடுத்து வந்துள்ளார்கள். மேலும் மதுரையைச் சேர்ந்த அவர் காணாமல் போன அன்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் எனவும் அவரது கணவர் கோவிந்தராஜ் மற்றும் மகன் விஜயகுமார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரது குடும்பத்தினருடன் அந்த பெண்ணை இந்த அமைப்பினர் ஒப்படைத்தனர்.