சென்னை தலைமை செயலகத்தில் சென்னை மாநகராட்சி மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலர் இறையன்பு நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டத்தில்  சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களை மேம்படுத்துவது அடிப்படை  கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், கழிப்பறைகளை பராமரிப்பது மற்றும் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தை தூய்மையாக பராமரிப்பது போன்றவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்துவது தொடர்பாக முதன் முறையாக தலைமை செயலர் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக உள்ள பேருந்து நிலையங்களில் மழைக்காலங்களில் நீர் தேங்க விடாமல் தடுக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தலைமை செயலர் தலைமையில் சென்னை மாநகராட்சி மாநகரப் போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும உயர் அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட உள்ளது.

அந்த வகையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் மழை நீர் வடிகால் பேருந்து நிலையங்களில் தேங்கும் மழை நீரை வெளியேற்றும் விதமாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பேருந்து நிலையங்களில் தரைதள வடிவமைப்பிலும் சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அது தவிர கழிப்பறை வசதிகள் மற்றும் அமரும் இடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்தவும் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இடவசதி உள்ள பேருந்து நிலையங்களை எல்இடி திரையுடன் சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் பணிகள் விரைந்து தொடங்கப்பட இருக்கிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.