பார்சல் சேவைகளுக்கு 23 கோடி ரூபாய் சேவை வரி செலுத்தும் படி ஹல்திராம் மார்க்கெட்டிங் நிறுவனத்திற்கு மத்திய ஜி.எஸ்.டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை எதிர்த்து ஹல்திராம் நிறுவன சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு  தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் மேல்முறையீட்டு தாக்கல் மனு சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தலைவர் நீதிபதி திலீப் குப்தா, உறுப்பினர் பி.வி.சுப்பாராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது.

அதில் பார்சல் சேவைகளுக்கு வரி விதிக்க கூடாது என தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ஒரு உணவகத்தில் உணவு பரிமாறப்படுவது, சுத்தம் செய்யப்படுவது, டேபிள் துடைக்கப்படுவது போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது. அதனால் உணவகத்தில் வாடிக்கையாளர் அமர்ந்து உணவு சாப்பிடும் போது அதற்கு சேவை வரி விதிக்கப்பட வேண்டும். அதே சமயம் ஒரு உணவகத்தில் இருந்து வாடிக்கையாளர் பார்சல் உணவு வாங்கும்போது அவர் உணவு என்ற பொருளை மட்டுமே வாங்குகின்றாரே தவிர உணவகத்தின் சேவைகள் எதுவும் அவர் பெறுவதில்லை. அதனால் வாடிக்கையாளர் பார்சல் உணவு வாங்கிக் கொண்டால் அதற்கு சேவை வரி விதிக்கப்படக் கூடாது என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு உணவகங்களுக்கு சேவை வரியை நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. அதன் பின் 2015 ஆகஸ்ட் 13-ஆம் தேதி உணவு பார்சல் மற்றும் ஹோம் டெலிவரி சேவைகளுக்கு வரி கிடையாது என நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளதை  தீர்ப்பாயம் சுட்டிக்காட்டி உள்ளது.  உணவு பார்சல் வழங்குவதை பொருள் விற்பனையாக மட்டுமே கருத வேண்டும் எனவும் அதை ஒரு தேவையாக கருதக்கூடாது எனவும் பார்சல் சேவைக்கு சேவை வரி விதிக்கப்படக்கூடாது எனவும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.