டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் தார் எஸ்யூவி ஓட்டுநர் ஒருவர், சிறிய தகராறில் பாதுகாப்பு காவலர் மீது காரை மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி இரவு, ராஜீவ் குமார் எனும் பாதுகாப்பு காவலர் வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த தார் காரில் ஓட்டுநர் ஹார்ன் அடித்ததை கண்டித்தார். இந்தச் சின்ன தகராறே வாக்குவாதமாக மாறியது.

வாக்குவாதத்தில் கோபமடைந்த கார் ஓட்டுநர் விஜய், காவலரை மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன் பின் சாலையை கடக்க முயன்ற காவலர் ராஜீவ்குமார் மீது திடீரென வேகமாக வந்து  தார் கார் மோதியது. தரையில் விழுந்த காவலரை மீண்டும் பின்னோக்கி வந்த கார் மீண்டும் மோதியது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த தாக்குதலில் காவலர் ராஜீவ் குமார் இரு கால்களிலும் பல எலும்பு முறிவுகளுடன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து தப்பியோடிய விஜய் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.