திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று காலை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மூஞ்சிக்கல் பேருந்து நிறுத்தத்திற்கு சென்ற போது பின்பக்க டயர் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது. இதனை அறிந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தை விட்டு கீழே இறங்கினர்.
இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு டயரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது, பேருந்தின் பின் சக்கரத்தை இணைக்கக்கூடிய இரும்பு கம்பியின் அச்சு முறிந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.