நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அடுத்த சூரிய கவுண்டம்பாளையம் பகுதியில் வந்தபோது  எதிரே மொபட்டில் வந்த முதியவர் மீதும், சாலையோரம் இருந்த புளிய மரத்திலும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மொபட்டில் வந்த கூத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (70) என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இயக்குனராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். அதேபோல் பேருந்தின் முன்பக்க சீட்டில் அமர்ந்து பயணம் செய்த மேனகா(27), கல்லூரி மாணவர் நவீன் குமார்(27) ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். அதேபோல் பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் சிறு சிறு காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.