நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார். அதனை தொடர்ந்து பொருளாதார ஆய்வு அறிக்கை வெளியிடப்பட உள்ளது. வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி 2023-2024  ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றுகின்றார். இந்நிலையில் இன்று மதியம் பட்ஜெட் கூட்டத்தொடர் சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கான அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இதனையடுத்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத்  ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற இணைப்பு கூட்டத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சிகளின் அவை குழு தலைவர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளை எதிர் கொள்வதற்கான வியூகம் மற்றும் கூட்டணி கட்சிகள் இடையேயான ஒத்துழைப்பு போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.