மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சில நாட்களில் நாட்டின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்து மக்களுக்கு பலவிதமான எதிர்பார்ப்புகள் உள்ளது. நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துவோர் வரி நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குறிப்பாக நடுத்தர குடும்பங்களின் நுகர்வை அதிகரிப்பதில் அரசு முழு கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. பழைய வழி முறையில் இருந்து வரி செலுத்துவோரை புதிய வழிமுறைக்கு இழுப்பதற்காக புதிய வரி விதிப்பு முறையை கவர்ச்சிகரமானதாக மாற்ற பல கட்ட நடவடிக்கைகளை அரசு அறிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

புதிய வரி விதிப்பு முறையின் கீழ் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வரி செலுத்துவோர் விரும்புகின்றனர். இதனை அரசு செயல்படுத்த முடியாது என்றாலும் வரவிருக்கும் பட்ஜெட்டில் அரசாங்கம் செயல்படுத்தக்கூடிய சிலவற்றை காணலாம். அதாவது சம்பளம் பெறும் நபர்களுக்கான நிலையான விலக்கு என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. தற்போதைய புதிய வரி முறையில் விலக்குகள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் பழைய வரிமுறையில் 80c பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட சில முதலீட்டு அடிப்படையிலான விலக்குகளை அறிமுகப்படுத்துவது புதிய வழிமுறையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஓய்வூதியத்திற்கான திட்டமிடல், குழந்தைகளின் கல்வி மற்றும் நிதி வளர்ச்சி போன்ற கூடுதல் நன்மைகளில் இருந்து வரி செலுத்துவோர் பயனடைவார்கள். வணிகம் மற்றும் தொழில் முறை வரி செலுத்துபவர்கள் வரிவிதிப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும் வசதிகளை அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சாதகமாக பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.