பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியும், இந்திய ஜனநாயகக் கட்சியின் இணைப் பொதுச் செயலாளராக இருந்தவருமான லீமா ரோஸ், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளாக கட்சிக்காக இரவு பகல் பாராமல் உழைத்த போதிலும், தனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், சமீபகாலமாக கட்சித் தலைமை தன்னை உதாசீனப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, கடலூரில் நடைபெற்ற கட்சியின் சமீபத்திய மாநாட்டில் மேடையில் அமர தனக்கு உரிய இடம் அளிக்கப்படாதது, கடந்த எட்டு மாதங்களாக நிலவி வந்த அதிருப்தியின் உச்சகட்டமாக அமைந்ததாக அவர் தனது அறிக்கையில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை லீமா ரோஸ் நேரில் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருவாடானை தொகுதியில் போட்டியிட அவர் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

ஐஜேகே தலைமையின் தன்னிச்சையான முடிவுகளால் அதிருப்தியடைந்துள்ள அவர், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக கோவை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.