தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த விமர்சனங்களுக்கு, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நயினார் நாகேந்திரன், நடிகர் விஜயை ஒரு நடிகையுடன் ஒப்பிட்டுப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நாஞ்சில் சம்பத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் நபர், பொதுவெளியில் எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக் கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.

தங்களது கட்சியின் கிளைச் செயலாளர் கூட இவரை விட மிகவும் கண்ணியமான முறையில் பேசக் கூடியவர் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ளவர்களுக்கு ஏன் காய்ச்சல் வருகிறது என்றும், இரு இடங்களும் இப்போது ஒன்றாகவே மாறிவிட்டனவா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.