ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குரில் தீவுகள் அருகே இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.0 எனப் பதிவாகியுள்ளது.
தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கடலில் ஏற்பட்டுள்ள இந்த அதிர்ச்சி காரணமாக அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது.
இதற்கு முன், ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் சில நாட்களுக்கு முன் 8.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, ஜப்பான், அலாஸ்கா உள்ளிட்ட பசிபிக் கடற்கரை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கம்சட்கா பகுதிகளில் 3 முதல் 4 மீட்டர் உயரமுள்ள அலைகள் தாக்கியதாகவும், வீடுகள் குலுங்கி கண்ணாடிகள் உடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹவாயி மாநிலம் கூட குறைந்த அளவிலான சுனாமி கண்காணிப்பில் வைக்கப்பட்டது.
தற்போதைய குரில் தீவுகள் நிலநடுக்கம், சமீபத்திய கம்சட்கா நிலநடுக்கத்துக்கு பின் ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடம் கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுனாமி அலைகள் உருவாகும் சாத்தியம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
