வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வு, வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் குளறுபடிகள் காரணமாக, அந்தத் தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிரடி முடிவெடுத்தது. இது மருத்துவக் கனவில் இருந்த மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது நிலவி வரும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேசிய தேர்வு முகமை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ரத்து செய்யப்பட்ட நீட் தேர்விற்குப் பதிலாக, மறுதேர்வு வரும் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும்.
இந்த மறுதேர்விற்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களே தேர்வில் பங்கேற்கலாம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மே 3-ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் வினாத்தாள் கசிவு உறுதியானதால், தேர்வின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் ஹால் டிக்கெட் (Hall Ticket) தொடர்பான தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலமே உள்ளதால் மாணவர்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர்.
