யமுனோத்திரி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் 13 மீட்டர் அகலமும்,  9 மீட்டர் உயரமும் கொண்ட சுரங்கம் அமைக்கப்படுகிறது. நான்கு வருடங்களாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில்க்யாராவிலிருந்து பார்கோட் வரை  4.5 கிலோமீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டும்  பணி இரண்டு புறமும் இருந்து நடைபெற்று வருகிறது. கடைசி ஒரு மாதத்தில் மட்டும் 41 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர்,  உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர்,  ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர்,  பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர்,  மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர்,  உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2  பேர் ஹிமாச்சலப் பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த 1 நபர் என 41 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களில் சில்க்யாராவிலிருந்து 2080 மீட்டர் சுரங்கத்தை ஏற்கனவே தோண்டி முடித்து விட்டார்கள். அதேபோல் பார்கோட் பகுதியில் இருந்தும் 1750 மீட்டர் தோண்டி முடித்து விட்டார்கள்.  நான்கு கிலோ மீட்டர்கள் சுரங்கம் தோண்டியாச்சு. 441 மீட்டர்கள் மட்டும் இடையிலுள்ள பகுதியை தோண்ட வேண்டும். அந்த இறுதி கட்டப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை வேளையில்,

சில்கியாராவிலிருந்து 205 மீட்டர்கள் தொலைவில்….  நுழைவாயில் இருந்து 250 மீட்டர் தொலைவில் 55 மீட்டர் மொத்த காங்கிரட் பகுதியும் சரிந்து விழுகின்றது. ஏற்கனவே 441 மீட்டர் தோண்ட வேண்டியது இருக்கு. இப்போ புதிதாக 55 மீட்டர்களில் அடைப்பு விழுந்து இருக்கு. 2 பக்கமும் போக முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கிறார்கள்.

இந்த விஷயமே நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்கு பிறகு தான் வெளியே தெரிய வருகிறது.  ஏற்கனவே அமைத்திருந்த குழாய் வழியாக ஆக்சிஜனும்,  உணவும் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தொழிலாளர்களை மீட்பதற்காக இரண்டு ஜேசிபி,  ஒரு எஸ்கவேட்டர் இயந்திரங்களை பயன்படுத்தினார்கள். ஆனால் இரண்டு நாட்கள் பிறகு  தொழிலாளர்களை இதன் மூலமாக மீட்க முடியாது என  தெரிய வருகிறது.

எனவே உத்தரகாண்ட் மாநில அரசு மத்திய அரசின் மூலமாக நாட்டில் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள்,  பொறியியல் சார்ந்த நிறுவனங்கள் அனைத்துமே அழைக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி 5 திட்டங்களை முன்மொழிகிறார்கள்.  இந்நிலையில் இன்று பைப் வழியாக உள்ளே சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர் முதல் கட்டமாக 5 தொழிலாளர்களை மீட்டு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.