தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருக்கு எதிரான ஊழல் புகாரில், அமலாக்கத்துறை வழங்கிய 232 பக்கங்கள் கொண்ட ஆவணத் தொகுப்பில் உள்ள ரகசியத் தகவல்களை அதிமுக தற்போது பகிரங்கமாக வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஆவணத்தின் 51-வது பக்கத்தில், அரசு டெண்டர்களுக்கு 7.5% முதல் 10% வரை ‘கட்சி நிதி’ என்ற பெயரில் கமிஷன் வசூலிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை அதிமுக சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சுமார் ₹1,020 கோடி மதிப்பிலான இந்த ஊழல் புகாரில், அமைச்சரையும் அவரது குடும்பத்தினரையும் காப்பாற்றவே இத்தனை நாட்களாக காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் தாமதித்து வந்ததாக அதிமுக தரப்பு கடுமையாகச் சாடியுள்ளது. இந்த விவகாரத்தில், போதிய ஆதாரங்கள் இருந்தும் லஞ்ச ஒழிப்புத்துறை ஏன் விசாரணையைத் தொடங்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது.

இதனால் அமலாக்கத்துறை பகிர்ந்த ஆதாரங்களின் அடிப்படையில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதிமுக வெளியிட்டுள்ள இந்த ஆவணங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் “அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து ஊழல் கோப்புகளும் திறக்கப்படும், முறைகேடுகள் செய்தவர்களின் முகத்திரைகள் கிழிக்கப்படும்” என்று அக்கட்சித் தலைமை இந்த ஆதாரங்களின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.