தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரண்டாம் நாள் கூட்டத்தின் போது கரூர் துயரம் தொடர்பாக அதிமுக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, கரூர் துயரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை உலுக்கியுள்ளது. அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம்.

அவர் அறிவிக்கப்பட்ட 12 மணியை கடந்து 7 மணி நேரம் தாமதமாக வந்தார். கரூர் துயர சம்பவம் நடந்த அதே இடத்தில் தான் இரண்டு நாட்களுக்கு முன்பாக அதிமுக கூட்டம் நடந்தது. அப்போது அங்கு கூடியவர்கள் கட்டுப்பாடுடன் கூடி கலைந்து சென்றனர். ஆனால் தமிழக வெற்றிக்கழகத்தின் கூட்டத்தில் கட்டுப்பாடு இல்லாததே இந்த பிரச்சனைக்கு காரணம். கூட்ட ஏற்பாட்டளர்கள் சில முக்கியமான விஷயங்களை செய்திருக்க வேண்டும் ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தில் அவ்வாறு நடக்கவில்லை.

பொது மக்களுக்கு போதிய குடிநீர் மற்றும் உணவு வழங்கப்படவில்லை. பெண்கள் இயற்கை உபாதை கழிக்க வழி இல்லை. அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை. கூட்டத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற தான் ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் ஆம்புலன்ஸ் மீது தமிழக வெற்றிக்கழகத்தினர் தாக்கினர். கூட்டத்திற்கு வருபவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் தவெக செய்து கொடுக்கவில்லை.

வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் காவலர்கள் எண்ணிக்கையை விட கரூர் பிரச்சாரத்தின் போது அதிகமாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தை தமிழ்நாடு அரசு விரைந்து கையாண்டு செயல்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் போன்ற இனி நடக்கக்கூடாது என அரசியல் கட்சிகள் உறுதி ஏற்க வேண்டும். மேலும் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று கூறினார்.