கடந்த 2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்திற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதுகளில், சமூகக் கருத்துகளை முன்வைத்த மற்றும் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட பல்வேறு திரைப்படங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. அதன்படி, 2016-ஆம் ஆண்டுக்கு ‘மாநகரம்’, 2017-க்கு ‘அறம்’, 2018-க்கு ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களுக்கான முதற்பரிசை வென்றுள்ளன.
மேலும், 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2020-ஆம் ஆண்டுக்கு ‘கூழாங்கல்’, 2021-ஆம் ஆண்டுக்கு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக ‘கார்க்கி’ ஆகிய படங்கள் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளன.
மேலும் இதேபோன்று சிறந்த நடிகர்களுக்கான விருதுகளை 2016 ஆம் ஆண்டு வெளியான புரியாத புதிர் படத்திற்காக விஜய் சேதுபதியும், 2017 ஆம் ஆண்டு வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்காக நடிகர் கார்த்தியும், 2018 ஆம் ஆண்டு வெளியான வடசென்னை படத்திற்காக நடிகர் தனுஷூம், 2019 ஆம் ஆண்டு வெளியான ஒத்த செருப்பு படத்திற்காக நடிகர் பார்த்திபனும், 2020 ஆம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவும், 2021 ஆம் ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை படத்திற்காக நடிகர் ஆர்யாவும், 2022 ஆம் ஆண்டு வெளியான டானாக்காரன் படத்திற்காக நடிகர் விக்ரம் பிரபுவும் பெற்றுள்ளனர்.
