கோவா மாநிலம் ஷிர்காவோவில் உள்ள ஸ்ரீ தேவி லைராய் கோவிலில் நடைபெற்ற வருடாந்திர திருவிழாவில், திடீர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 70க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

திருவிழாவிற்காக சனிக்கிழமை அதிகாலையில் ஆயிரக்கணக்கானோர் கூட்டமாக  கூடியிருந்தனர். குறுகிய வழித்தடங்களில் ஏற்பட்ட நெரிசலில், மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து இந்த சோகம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின், கோவா அரசு முக்கியமான முடிவொன்றை எடுத்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, அரசு ஆதரவுடன் நடத்தப்படும் அனைத்து விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது நிர்வாகத் துறையின் துணைச் செயலாளர் ஷ்ரேயாஸ் டி சில்வா வெளியிட்ட சுற்றறிக்கையில், அனைத்து அரசுத் துறை அதிகாரிகள், நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் கண்டிப்பாக இதனை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். திருவிழாவில் சுமார் 30,000 முதல் 40,000 பேர் வரை கலந்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவா காவல் துறை இயக்குநர் அலோக் குமார் கூறுகையில், “கோயில் பகுதியில் இருந்த சரிவில் ஏறத்தாழ 40–50 பேர் விழுந்தனர். இதுவே நெரிசலை உருவாக்கி, பல உயிர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தியது” என்றார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு உறுதி தெரிவித்துள்ளது.