அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பி. வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு தொடர்ந்தவர்கள் யார் யார் என்னென்ன பொறுப்பு வகிக்கிறார்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது இருதரப்பு வழக்கறிஞர்களும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எனக்கூறி வாதங்களை முன் வைத்தனர். அப்போது நீதிபதிகள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என்றால் என்ன அர்த்தம் என்று இருதரப்பு வழக்கறிஞர்களிடமும் கேள்வி எழுப்பினர். அதற்கு வழக்கறிஞர்கள் இருவரும் தங்கள் சொந்த ஊர்களின் பெயர்களை தங்கள் பெயருடன் இணைத்துள்ளார்கள் என்று கூறினார்கள்.