தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளுக்குப் பிறகு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் தவெக-வுக்கு ஆதரவளிக்கப் போவதாகப் பரவிய வதந்திகளுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் (இபிஎஸ்) நடத்தப்பட்ட அவசர ஆலோசனைக்குப் பிறகு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக ஆதரவளிக்கப் போவதாகச் சமூக ஊடகங்களிலும் சில ஊடகங்களிலும் வெளியாகி வரும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை; எந்தச் சூழலிலும் தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது” என மிகத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே தவெக-வுக்கு ஆதரவு தரக் காங்கிரஸ் முன்வந்துள்ள நிலையில், அதிமுக தனது நிலைப்பாட்டை ஓப்பனாகத் தெளிவுபடுத்தியுள்ளதுடன், தாங்கள் எதிர்க்கட்சியாகவே இருந்து மக்கள் பணியாற்றப் போவதாகவும், கட்சிக்குள் எந்தப் பிளவும் இல்லை என்றும் கே.பி. முனுசாமி அதிரடியாகக் கூறியுள்ளார்.
இபிஎஸ் உடனான இந்த முக்கிய ஆலோசனைக்குப் பிறகு வெளியாகியுள்ள கே.பி. முனுசாமியின் இந்த நெத்தியடி பேட்டி, தவெக அரசுக்கு ஆதரவு தரத் தயாராக இருந்ததாகக் கூறப்பட்ட சில அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் கணக்குகளையும், கோட்டை வட்டாரக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளையும் தலைகீழாக மாற்றியுள்ளது.
