
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல்களை இந்தியாவின் பாதுகாப்பு படைகள் முறியடித்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
அதன் பிறகும் பாகிஸ்தான் அத்துமீறியதால் இனி தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரித்தார். தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கினாலும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி-வாகா எல்லை மூடல் ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை. போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்போ, பின்போ எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லையின் நிலவரம், ஆப்ரேஷன் செந்தூர் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.