1.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கத்தோலிக்க திருச்சபைக்கு புதிய தலைவராக, அமெரிக்க கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது, உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்கர்களுக்கு மிக முக்கியமான ஒரு திருப்பமாகக் கருதப்படுகிறது.

சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் வெள்ளை புகை வெளியேறிய 70 நிமிடங்களுக்குப் பிறகு, செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் மைய பால்கனியில் “லியோ XIV” என்ற புதிய பெயருடன் போப்பாண்டவர் தோன்றினார். இது முதல் முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் போப்பாண்டவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

69 வயதான பிரீவோஸ்ட், சிகாகோவைச் சேர்ந்தவர். இவர் பெருவில் ஒரு மிஷனரியாக ஆண்டுகள் பல பணியாற்றிய அனுபவமுள்ளவர். கடந்த 2023ஆம் ஆண்டில் கார்டினலாக நியமிக்கப்பட்ட அவர், பொதுவில் பேசுவதில் மிக மிகச் சுருக்கமானவர் எனவும், ஊடகங்களிடம் மிகக் குறைந்த அளவிலேயே கருத்து தெரிவிப்பவர் எனவும் அறியப்படுகிறார்.

செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, “ஹேபமஸ் பாப்பம்” (எங்களுக்கு ஒரு போப் இருக்கிறார்) என்ற லத்தீன் வார்த்தைகள் மூலம் புதிய போப்பின் தேர்வு அறிவிக்கப்பட்டது.