மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் பயிற்சிப்பெண் மருத்துவர் ஒருவர் கடந்த வருடம் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு சிபிஐ வசம் இருக்கிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சியால்தா குற்றவியல் நகர நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் வருகிற 18-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 18ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் நிலையில் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.