
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் சமீபத்தில் பரந்தூர் சென்று பொதுமக்களை சந்தித்தார். அங்கு விமான நிலையம் வராது என்றும் அதற்கான அனைத்து விதமான போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்றும் மக்களுக்கு உறுதி கொடுத்த அவர் பரந்துருக்கு பதில் வேறு இடத்தில் ஏர்போர்ட்டை அமைத்துக் கொள்ளுமாறு கோரிக்கையும் விடுத்தார். நடிகர் விஜய் தன்னுடைய முதல் அரசியல் களப்பயணத்தை தொடங்கிய நிலையில் அடுத்ததாக வேங்கை வயல் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாளை சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது தமிழக வெற்றிக் கழகத்தில் நகரச் செயலாளர் பதவிக்கு 15 லட்ச ரூபாய் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் கடுமையாக எச்சரித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பணத்திற்காக பதவி கொடுக்கப்பட மாட்டாது எனவும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து தான் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் கலந்து கொள்வார் என்று கூறப்படும் நிலையில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது பணம் கொடுக்கல் வாங்கல், மாவட்ட செயலாளர்கள், ஒன்றியம் மற்றும் நகர செயலாளர்கள் உள்ளிட்ட நியமனங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.