தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று  கூறி வருவது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. சமீபத்தில் ஆளுநர் பொங்கல் விழாவுக்கு தலைவர்களை அழைப்பதற்காக கொடுத்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு தமிழ்நாடு இலச்சினையையும் ஆளுநர் பயன்படுத்தவில்லை. இது பெரிய பிரச்சனையாக மாறிய நிலையில் பலரும் ஆளுநருக்கு கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு என்ற பெயரை தான் மாற்றுவதற்கு முயற்சி செய்யவில்லை என்று ஆளுநர் மாளிகையில் இருந்து தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் என்னுடைய கண்ணோட்டத்தினை தமிழ்நாடு என்ற பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் எதார்த்தத்திற்கு புறமானது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய பேச்சின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கு முயற்சி செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருவதால் தான் தற்போது இந்த விளக்கத்தை கொடுத்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.