
ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி (75), பாக்கியம் (65) தம்பதியை கொலை செய்துவிட்டு 12 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரமேஷ், மாதேஸ்வரன், ஆஞ்சியப்பன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஞானேஸ்வரன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தனியாக இருக்கும் தம்பதியை நோட்டமிட்டு அவர்களை கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் பகலில் வேலைக்கு செல்வது மற்றும் இரவில் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவர்கள் தமிழகத்தை உலுக்கிய பல்லடம் கொலை வழக்கையும் தாங்கள்தான் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். அதாவது அதாவது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு மற்றும் மகன் செந்தில்குமார் ஆகிய 3 பேரை அடித்துக் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 8 சவரன் தங்க நகைகளை கடந்த வருடம் நவம்பர் மாதம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதனை தற்போது மாவட்ட எஸ்பி செந்தில்குமார் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் குற்றவாளிகள் நால்வரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவர்களுக்கு ஜூன் 2-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழுமாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.