தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ஆளுங்கட்சியினருக்கு எதிராகக் கடுமையான வாதங்களை முன்வைத்துப் பேசினார். அவர் தனது உரையில், “தனது டேபிளில் முக்கியமான பைல் இருப்பதாகவும், அதைத் திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்றும் முதல்வர் பேசியிருந்தார். தயவுசெய்து அவர் அந்தப் பைலைத் திறந்து பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக நீங்கள் பயப்படுகிறீர்கள்? ஏன் இவ்வளவு காலம் தாழ்த்துகிறீர்கள்? ஒருவேளை ஜோதிடர் சொன்னால் தான் பைலைத் திறப்பீர்களா? அல்லது நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பினார். மேலும், “நடவடிக்கை எடுப்பேன் என்றெல்லாம் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் பயந்துவிட மாட்டோம்” என்றும் அவர் எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆளுங்கட்சியினர் எங்களுக்குப் பதிலளிக்கும்போது எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி சட்டமன்றத்திலேயே பாட்டெல்லாம் பாடுகிறார்கள். நாங்கள் என்ன சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா அல்லது சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு அங்கே பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன” என்று சாடினார்.
அவை குறிப்புகள் குறித்துப் பேசிய உதயநிதி, “நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதில் சில கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறீர்கள். ஆனால், நீக்கப்பட்ட அந்தப் பகுதிகள் உடனடியாக ரீல்ஸ்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி விடுகின்றன. அப்படி இருக்கும்போது, அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது?” என்று தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
