வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை  வெளுத்து வாங்கிய நிலையில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி நிரம்பியது. இதைத்தொடர்ந்து தற்போது சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியும் முழு கொள்ளளவை அடைந்து விட்டது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி அளவில் செம்பரம்பாக்கம் ஏரியல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளதுறையும் மாவட்ட ஆட்சியரும் அறிவித்துள்ளனர். தற்போது ஏரியின் நீர்மட்டம் 23 அடியை கடந்துள்ளதால் பாதுகாப்பு கருதி திறக்கப்பட உள்ளது. இன்று ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏற்கனவே பூண்டி ஏரியிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 12760 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பூண்டி ஏரியில் நேற்று 5000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புழல் எரியிலும் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தான் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில் இன்றும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் ஏற்கனவே பூண்டி ஏரியிலிருந்தும் நீர் திறக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். மேலும் அதே சமயத்தில் நீர் திறப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நீர்வளத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.