
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே உள்ள அ.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் (25). இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் அடிக்கடி வீட்டிற்கு தெரியாமல் சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். வழக்கம்போல தீபன் ராஜ் அந்தப் பெண்ணை தனியாக அழைத்து சந்தித்து பேச வேண்டும் என கூறியுள்ளார்.
அதனால் அப்பெண்ணும் காதலரை சந்திப்பதற்காக வீட்டிற்கு தெரியாமல் சென்றுள்ளார். அப்போது தீபன் ராஜ் சண்முகநாதபுரத்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதன் பின் தனது நண்பர்களான திருமாறன் (22), மதன் (20) ஆகியோரை செல்போன் மூலம் அழைத்துள்ளார். இதனை அடுத்து 3 பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து அந்தப் பெண் தப்பிக்க முயற்சி செய்த போதும் முடியாமல் தவித்துள்ளார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண் மேலவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
பின்னர் இன்ஸ்பெக்டர் காஞ்சனாமாலா, மேலவளவு சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், தனி பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.