சோமாலியா நாட்டில் மேயரின் அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி எடுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதில் 11 நபர்கள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோமாலியா என்னும் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் அல் ஷபாப் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த அமைப்பினர், காவல்துறையினர், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினரை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மொகாதிசு என்ற பகுதியில் அமைந்திருக்கும் மேயர் அலுவலகத்தின் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர்.

அந்த அலுவலகத்தின் தடுப்புச் சுவரை முதலில் வெடிகுண்டு வைத்து தகர்த்தார்கள். அதன் பிறகு பயங்கரமான ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

இதில் பொதுமக்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து அறிந்த ராணுவத்தினர் உடனடியாக மேயர் அலுவலகத்தை சுற்றி பாதுகாப்பாக நின்றனர். அதனைத்தொடர்ந்து ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. கடைசியாக தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகள் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள்.