இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மெட்ரோ நகரமாக பெங்களூரு இருக்கிறது. பெங்களூருவில் நம்ம மெட்ரோ என்ற பெயரில் 25.63 கிலோமீட்டர் தூரத்திற்கு பர்பிள் லைன் மற்றும் 30.32 கிலோமீட்டர் தூரத்திற்கு கிரீன் லைன் மெட்ரோ சேவைகள் பயன்பாட்டில் இருக்கிறது. இதில் பர்பிள் லைனில் பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த சேவையை பையப்பனஹள்ளியிலிருந்து ஒயிட்ஃபீல்டு வரை நீடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதில் கே.ஆர் புரம் முதல் ஒயிட்ஃபீல்டு வரை 13.71 கிலோமீட்டர் தூரத்திற்கான மெட்ரோ சேவையை கடந்த 25-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் பையப்பனஹள்ளி முதல் கே.ஆர் புரம் வரையில் 2.5 கிலோமீட்டர் தூரத்தில் பணிகள் முடிவடையாமல் இருந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பையப்பணஹள்ளி முதல் கே.ஆர் புரம் வரையிலான மெட்ரோ சேவை ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று தகவல் வெளியானது தற்போது பெங்களூர் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.