
மகளிர் மற்றும் சிறுமிகளின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் ஒடுக்கும் தாலிபான் ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஆப்கானிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியை சர்வதேச போட்டிகளில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெய் ஷா தலைமையிலான ICC நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில், பெண்கள் கல்வி மற்றும் விளையாட்டில் பங்கேற்கும் உரிமையை மீண்டும் பெற்றால் மட்டுமே ஆப்கானிஸ்தானை மீண்டும் சேர்க்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை வழிகாட்டுதல்களை பின்பற்றும் விதமாக ICC ஒரு மனித உரிமை கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் மகளிர் அணியை உருவாக்குவதற்கான எந்த முயற்சியும் தாலிபான் அரசு மேற்கொள்ளவில்லை என்பதையும் அந்த அமைப்பு குறிப்பிடுகிறது. விளையாட்டில் பங்கேற்கும் உரிமை மனித உரிமைகளில் ஒன்றாகும், ஆனால் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு அது முழுவதுமாக மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், ICC, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) வழிமுறைகளை பின்பற்றி, ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு இடம் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேநேரத்தில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) ICC விதிகளை பின்பற்றத் தவறியதால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.