சென்னையில் உள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தை ஒட்டி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது. இந்த விடுதிகளில் பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதி கிடையாது என தற்போது பொதுத்துறை செயலர் டி. ஜெகநாதன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விதமாக விடுதியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது‌. இந்த விடுதியில் அவர்களின் பணியாளர்கள் தங்கிக் கொள்ள அனுமதி கிடையாது.

ஏதேனும் அவசர தேவை என்றால் மட்டுமே பணியாளர்கள் தங்கிக் கொள்ள அனுமதி உண்டு. விடுதிகளில் சமையல் செய்வதற்கு அனுமதி கிடையாது‌. இதேபோன்று விடுதிகளில் உள்ள பொருட்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அந்த அறையில் இருக்கும் உறுப்பினர்களே அதற்கு பொறுப்பாவார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏதேனும் அரசு விழாக்கள் காரணமாக அழைக்கப்பட்டால் அவர்கள் இரண்டு நாட்கள் வரை கட்டணம் இல்லாமல் விடுதியில் தங்கிக் கொள்ளலாம். மற்றபடி ஒரு மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே ஒரு உறுப்பினர் தங்க அனுமதி உண்டு. ஒரு நாளைக்கு 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் விடுதிகளில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.