3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 3வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் விளையாடும் 11 பேரில் மாற்றம் செய்யப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கி அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். டேவிட் வார்னர் (34 பந்துகளில் 56 ரன்கள் : 4 சிக்ஸர், 6 பவுண்டரி) அரைசதம் கடந்த நிலையில் பிரசித் கிருஷ்ணாவின் 9வது ஓவரில்  அவுட் ஆனார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் – மிட்செல் மார்ஷ் ஜோடி சிறப்பாக ஆடியது. மிட்செல் மார்ஷ் அரைசதம் கடந்து சிறப்பாக ஆடினார். எனவே ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. பின் மார்ஷ் 84 பந்துகளில் 13 பவுண்டரி, 3சிக்ஸர் உட்பட 96 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவின் 28வது ஓவரில் அவுட் ஆகி சதத்தை தவறவிட்டார்.

இதையடுத்து சிறப்பாக ஆடி வந்த ஸ்மித் 61 பந்துகளில் (8 பவுண்டரி, 1 சிக்ஸர்) 74 ரன்கள் அவுட் ஆனார். அதன்பின் வந்த அலெக்ஸ் கேரி 11, கிளன் மேக்ஸ்வெல் 5, கேமரூன் கிரீன் 9 ரன்கள் என அடுத்து வந்த பேட்டர்கள் அடுத்தடுத்து வெளியேறினாலும், மிடில் ஆர்டரில் லாபுசாக்னே சிறப்பாக ஆடி 58 பந்துகளில் 9 பவுண்டரி உட்பட  72 ரன்கள் சேர்த்து 49 வது ஓவரில் அவுட் ஆனார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. பேட் கம்மின்ஸ் 19 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். மேலும் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இந்திய அணியின்  லெவன் :

ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

ஆஸ்திரேலிய அணியின் லெவன் :

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(வி.கீ), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், தன்வீர் சங்கா, ஜேஷ் ஹேசில்வுட்.