இந்தியாவில் ரயில் போக்குவரத்தில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு வசதிகள் அதிகம் என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். இதனால் இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக புதுப்புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வருவதோடு சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அந்த வகையில் மொபைல் மற்றும் லேப்டாப் போன்றவற்றை ரயிலில் சார்ஜ் செய்வதற்கும் இந்திய ரயில்வே நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் செல்போன் மற்றும் லேப்டாப் பயன்படுத்தும் நிலையில் ரயிலில் ஜார்ஜ் போட்டுவிட்டு சுவிட்சை அணைக்காமல் விட்டு விடுகின்றனர்.

இதனால் ஷார்ட் சர்க்யூட் ஆகி தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதன் காரணமாக இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கடந்த 2014-ம் ஆண்டு ரயில்வே வாரியம் பிறப்பித்தது. அதன் பிறகு கடந்த 2021-ஆம் ஆண்டு அனைத்து துறைகளுக்கும் இது போன்ற உத்தரவை ரயில்வே வாரியம் பிறப்பித்தது. இருப்பினும் இந்த உத்தரவு ரயில் பயணிகளிடையே சரிவர சென்றடையவில்லை. மேலும் ரயிலில் பயணம் செய்யும்போது இந்திய ரயில்வே நிர்வாகத்தின் விதிமுறைகளை தெரிந்து வைத்திருப்பது மிக மிக நல்லது ஆகும்.